
நியாயமில்லாமல் மற்றவர்கள் தூஷிக்கும் போது …
சந்தோஷமான சூழ்நிலை, நெருக்கடியான சூழ்நிலை, வெற்றி பெற்ற சூழ்நிலை, மனக்கசப்பான சூழ்நிலை என்று வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் நாம் செல்ல வேண்டிருக்கிறது. சந்தோஷமான, வெற்றிகரமான சூழ்நிலையில் கர்த்தரை சில நேரங்களில் மறந்தாலும், மனதிற்குள்ளாக அவரைப் போற்றுகின்றோம். ஆனால், கசப்பான மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் செல்லும்போது மற்றவர்கள் நம்மைப் பார்த்து தகாத வார்த்தைகளால் சபித்து (அந்த சாபத்தைப் பெற எந்தவித அநியாயமும் செய்யவில்லை என்பது நமக்கே தெரியும். ஆனாலும்) அநியாயமாக குற்றம் சாட்டப்படும்போது நாம் அவர்கள் மீது கோபம் கொண்டு ஏன் இப்படி ஆகிறது? என்று தேவனிடம் கேள்வி கேட்கிறோம்.
வேதாகமத்தில் இப்படிபட்ட ஒரு சூழ்நிலையை தாவீது அரசனும் சந்திக்கிறார். ஆனால் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதே நமக்கு ஒரு நல்ல பாடமாகும். தாவீது அரசன் ஆவதற்கு முன்பும், அரசன் ஆனபின்பும் பல நெருக்கடியான சூழ்நிலைகளை சந்திக்கிறார். அந்த சூழ்நிலைகளில் எவ்வாறு தலைமைத்துவ பண்புகளைக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
சவுல் அரசன் மடிந்த பின்பு இஸ்ரவேல் அரசாங்கம் தாவீது அரசனின் கீழ் வருகிறது. சிறப்பாக ஆண்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய மகன் அப்சலோம் அரசைக் கைப்பற்ற நினைத்து, தாவீது அரசனையும் (தன் தகப்பனையும்), அவரோடுகூட இருப்பவர்களையும் பின் தொடர்ந்து வெற்றிக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டான். அதனால், தாவீதும், அவனோடுகூட இருந்தவர்களும் தப்பி ஓடிப்போனார்கள். அவர்கள் தப்பி ஓடி பகூர் என்ற ஊர் மட்டும் வந்தபோது, சவுல் வீட்டு வம்சத்தானாகிய சீமேயி என்ற மனிதன் தாவீதையும் அவனோடு இருந்தவர்களையும் பார்த்து தூஷித்துக் (சபித்துக்)கொண்டே நடந்து வந்தான். அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது கற்களையும் எறிந்தான் (2 சாமு. 16: 5,6) சீமேயி தாவீதைத் தூஷித்து, ‘இரத்தப் பிரியனே, பேலியாளின்மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ என்றான்.’
இங்கு ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தாவீது அரசனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். தாவீதோடு இருப்பவர்களும் தாவீதை அரசனாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சீமேயி மீது கோபம் கொண்டு அவனை கொல்ல நினைத்தார்கள். தாவீது மட்டும் ஆணையிட்டு இருந்தால் சீமேயியின் தலையை எடுத்திருப்பார்கள். அவருடைய படைத்தளபதி அபிசாய் தாவீதை நோக்கி: ‘‘அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே’’ என்றான் 2 சாமு 16 :9.
ஆனால் தாவீது அரசனோ வித்தியாசமான வேறுபட்ட பதில் அதற்குத் தருகிறார். ஒருவேளை இந்த சூழ்நிலையில் நாம் இருந்தோமானால் கோபத்தோடு சீமேயியை குறைந்தபட்சம் வேறு இடத்திற்கு இழுத்துச் செல்ல ஆணையிட்டிருபபோம். ‘‘தாவீதோ, அவன் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால், ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார்?’’ என்றார் (2சாமு 16:10) இந்த சூழ்நிலையில் சீமேயியை திட்டாமலும், கர்த்தரையும் திட்டாமலும் அதுவும் கர்த்தருடைய சித்தமென்று அந்த சூழ்நிலையிலும் தைரியத்துடன் பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து : ‘‘இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் (சீமேயி) எத்தனை அதிகமாய்ப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார்’’ (2சாமு 16:11,12) என்று அந்த சூழ்நிலையிலும் ஒரு Positive Approach கொண்டிருக்கிறார்.
இந்த மனப்பக்குவம் நம்மிடத்தில் உண்டா? சோதனையான காலக் கட்டங்களில் நாம் செல்லும் போது நமக்குத் தீங்குசெய்பவரை, சபிப்பவரை, திட்டுபவரை, வீண் வழக்குகளில் மாட்டி விட்டவரை எப்படி நோக்குகிறோம். நாமும் அவர்களைப் போன்று அவர்களை சபிக்கிறோமா? அல்லது பொறுமையோடு சகிக்கிறோமா? நம் வாழ்வில் கர்ததர் அனுமதித்தார் என்று பொறுமையோடு ஏற்றுக் கொளகிறோமா? நாமும் பதிலுக்கு அவர்களைச் சபிப்போமானால் சேற்றைமற்றவர்கள் மீது எறியவேண்டும் என்று நினைப்பவர் முதலாவது அவர்கள் கைகளில் தான் சேறு படிகிறது என்பதை உணரவேண்டும்.
அதனால், “ஏற்றக்காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1பேதுரு.5:6) அவ்விதமாகவே, அப்சலோம் மடிந்து, தாவீது அரசனாக திரும்பி வரும்போது சீமேயி எல்லோருக்கும் முன்பாக யோர்தான் நதியண்டையில் வரவேற்கச் சென்றான். அதோடு மட்டுமல்லாது ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டான். (2சாமு 19:16-20).
எல்லாவற்றிற்கும் நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது (நீதி 23:18)ன் படி கர்த்தர் எல்லாவிதமான இடுக்கண்களிலும் நம்மை கடந்து வெற்றிக் கொள்ள செய்வார். இந்த வெற்றி கர்த்தரால் உண்டானது என்று உணர்ந்து கொள்ள வேண்டும். வெற்றி வந்த பின்பு, நம்மை தூஷித்தவர்களை பழி தீர்க்க வாய்ப்பு கிடைக்கும். நம்மை தூஷித்தவர்கள், மட்டமாக நினைத்தவர்கள் தாழ்ந்து போய் இருப்பார்கள்.
இந்த சூழ்நிலையில் திரும்பவும் அபிசாய் ‘கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா?’ என்றான் (2சாமு 19:21) ஆனால் தாவீதோ. ‘‘நான் அரசனாகபதவி ஏற்கும் இந்த நாளில் ஏன் ஒருவனை சாகடிக்க வேண்டும்’’ என்று சீமேயியைப் பார்த்து, ‘‘நீ சாவதில்லை’’ என்று மன்னித்து அனுப்பினான். (2சாமு 19 :22,23) இந்த மனபான்மை நமக்கு வரவேண்டும். எதிரி நம் கையில் வந்தாலும் அவர்கள் தூஷித்ததற்கு, திட்டியதற்கு சமமாக சரிக்கு சரி செய்யாமல் மன்னித்து அனுப்ப நம்மை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். மேற்கண்ட சம்பவத்தில் நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தேவனைப் பற்றி அவரோடு வாழும்போது இடுக்கண்களில் இருந்து கர்த்தர் இரட்சிப்பார். ‘‘சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்’’ (யாக்கோபு 1:12) என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
கர்த்தர் நம்மையும் நம் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா
நங்கூரம் ஊழியங்கள்
