ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம்
நிலைநின்றால் . . .
பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே (எபிரேயர் 3 : 1) . . .
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இயேசு கிறிஸ்து நம்மை எதற்காக அழைத்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். “தேவன் நாம் இயேசுகிறிஸ்து அடைந்த மகிமையை அடையும்படிக்கு நம்மை அழைத்தார்’. (2 தெச. 2 : 14.) அதற்காக மாத்திரமல்ல; “உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் (1 பேதுரு 2 : 9). மேலும், ஜாதிகளின் மேல் நாம் அரசாளப் போகிறோம் (வெளி. 2 : 26, 27). ஆதலால், நாம் சாதாரண மனிதர்கள் அல்ல. தேவன் நமக்கொரு நல்நோக்கம் கொடுத்திருக்கிறார். நாம் அதை உணர வேண்டும்.
ஆதலால், நாம் முடிவுபரியந்தம் நிலைநின்று ஜெயங்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.
ஜெயங் கொண்டால் தேவன் நமக்கு தருகிறவைகள். . .
1. ஆதாம் என்றென்றும் உயிரோடிருக்கக் கூடாது என்று விலக்கின உயிர் வாழ்வளிக்கும் (ஜீவ விருட்சத்தின்) கனியை (ஆதி. 2 : 22, 23) நமக்கு புசிக்கக் கொடுப்பார். இதனால் நித்திய காலமும் உயிரோடிருக்கும் தன்மையை நமக்குள் எற்படுத்துவார். (வெளி. 2 : 7).
2. இரண்டாம் மரணத்திருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வார் (வெளி. 2 : 11). இரண்டாம் மரணம் எது? அப்பொழுது, மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப் பட்டன; இது இரண்டாம் மரணம். (வெளி. 20 : 14). மேலும், ஜீவ புத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன், மற்றும் பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள். (வெளி. 20 : 15). முதல் மரணம் எல்லாருக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஜெயங்கொண்டவர்களாயிருந்தால் இரண்டாம் மரணத்தின்று நம்மை விடுவிப்பார்.
3. மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுப்பார். மேலும், வெண்மையான குறிகல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும், அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய பெயரை (நாமத்தை)யும் கொடுப்பார். ( வெளி. 2 : 17).
4. பிதாவினிடத்தினின்று இயேசு அதிகாரம் பெற்றது போன்று ஜாதிகளை ஆள நமக்கு அதிகாரம் தருவார். ஆதலால், நாம் ஜாதிகளை ஆண்டு கொள்வோம். (வெளி. 2 : 26, 27)
5. நமக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும். ஜீவபுஸ்தகத்திலிருந்து நம்முடைய பெயரை (நாமத்தை) தேவன் கிறுக்கிப்போடாமல், தன் பிதாவாகிய கர்த்தருக்கு முன்பாகவும், தூதர்களுக்கு முன்பாகவும் நம்முடைய பெயரை (நாமத்தை) அறிக்கையிடுவார். (வெளி. 3 : 5). எத்தனை பெருமையான விஷயம் இது. இந்த உலகத்தில் தேவனின் நாமத்தை உயர்த்தி பிடிக்கும் நம்மை தேவன் அந்நாளில் உயர்த்திக் காட்டுவார்.
6. தேவன் நம்மை ஆலயத்தின் தூணாக்குவார். அதிலிருந்து நாம் நீக்கப்பட மாட்டோம். மேலும், தேவனுடைய நாமத்தையும், பரலோகத்திலிருந்து இறங்கி வருகிற புதிய எருசலேமின் நாமத்தையும், புதிய பெயரையும் (நாமத்தையும்) நம்மேல் எழுதுவார். (வெளி. 3 : 12).
7. இயேசு பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்காருவது போல, நாமும் இயேசுவினுடைய சிங்காசனத்தில் அவரோடே உட்கார அருள் செய்வார். (வெளி. 3 : 21).
அப்படிப்பட்ட நன்மைகளை இயேசுகிறிஸ்து நமக்கு வாக்களித்திருக்கிறார். ஆதலால், நம்முடைய இரட்சிப்பைப் பாதுகாத்து, நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். (எபி. 3 : 14).
- இரா யோவான்காந்தி
