counseling health

கரோனா வைரஸ் எனப்படும் COVID19, மனிதனை உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொடிய வியாதிகளில் ஒன்று வேகமாக பரவி, மரண பயத்தில் மனிதனை வைத்திருக்கிறது. இது ஒரு கொடிய தோற்று வியாதியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இன்றைக்கு உலகில் அநேகமாக எல்லா நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களை இந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கிறது, அதே சமயம் இந்த தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே வருகிறது. பல வளர்ந்த மற்றும் முன்னணி நாடுகள் இந்த வைரஸ் தொற்றினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது குறிப்பாக சைனா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, இரான், அமெரிக்கா, ஸ்பெயின், எகிப்து, ஜெர்மனி என்று பட்டியல் நீள்கிறது ஒரு பெரும் அச்சத்திற்கு காரணம். இந்த வரிசையில் இந்தியாவும், 147 நோய் தொற்றியோர் எண்ணிக்கையுடன் ,அடங்கும்.

இந்த வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க அரசாங்கங்கள் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அவ்வகையில் மக்களை சுகாதார துறை அறிவுறுத்தும் வைரஸ் தடுப்பு குறிப்புக்களில் முக்கியமானவை கை கழுவுதல், முகக் கவசம், கையுறை அணிதல் ஆகும். இதன் மூலம் வைரஸ் மனிதர்களிடையே பரவுவதை இயல்பாகத் தடுத்து விட முடியும் என்று அரசு நம்புகிறது. இதோடு நில்லாமல் பொது வெளியில் ஆறு அடி இடைவெளி அவசியம் என்றும் கண், மூக்கு, வாய் பகுதிகளை தங்கள் கைகளால் தொடுவதை தவிர்ப்பது போன்ற விதி முறைகள் மிஞ்சுவதையும் கேட்க முடிகிறது. அப்படியானால் இந்த தடுப்பு முறைகள் நமக்கு உணர்த்துவது தான் என்ன? பொதுவாக வைரஸ் ஆயுள் காலம் மிக குறைவாக இருக்கும். வெளிப்புற சீதோஷ்ண நிலையில் அவைகள் உயிர் வாழ்வது கடினம் போன்ற நிலைகள் மாறி, இன்று நாள், வாரக்கணக்கில் கரோனா வைரஸ் வாழக்கூடிய நிலை வந்திருக்கிறது என்றால், நாம் சுவாசிக்கும் காற்றின் மாசு எவ்வகை எத்தகையது என்பது புரியும். நம் கால் நம் கண், மூக்கு, வாய் போன்ற அவயவங்களை தொடுவதே ஆபத்து எனும் அவல நிலை எத்துனை அபாயகரமானது.

இன்றைக்கு இந்த கரோனா வைரஸ்சின் தீவிரம் பயங்கரமாய் இருப்பதற்கு காரணம் 1. காற்று மாசு 2. உணவில் கலப்படம் 3. மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இன்மை. ஆக இந்த மூன்றே முக்கிய மூலக்காரணம். இந்த மூன்று காரணிகளுக்கான காரணத்தை களைவதற்கான முனைப்பில் நமோ, நமது அரசோ இன்று இல்லை. நாம் அனைவரும் எப்போதும் காரியத்தில் மாத்திரம் கண்ணாய் இருப்போம். இது தான் நமது தொன்று தொட்ட வழக்கம். இதில் நமக்கு நிரந்தர தீர்வுக்கு வழியில்லை. நேற்று ஒன்று இருந்தது, இன்று ஒன்று இருக்கிறது, நாளை ஒன்று வரும். நமக்கோ நேற்றைய குறித்த வருத்தம் இல்லை, நாளைய குறித்த கவலையும் இல்லை. நாம் அனைவரும் இன்றைக்காக மட்டுமே வாழ்கிறோம். நம் அனைவருக்கும் தேவையான ஒரு குணம் நேற்றைய குறித்த வருத்தம், அதினால் நாம் பாடம் கற்கிறோம். அதேபோல நாளைய குறித்த கவலை நமக்கு அச்சத்தையும் நம்பிக்கையையும் தருகிறது அதினால் இன்றைய வாழ்க்கையை நாம் சீர்படுத்தி சிறப்பாய் வாழ முயற்சிப்போம். அதுவே சிறப்பான வாழ்க்கையாக முடியும்.

காற்று மாசு :

இந்த கரோனா வைரஸ்சின் முக்கிய அவையவம் பாதிப்பு நுரையிரல். ஆனால் அதே நேரத்தில் வைரஸ்சின் ஆயுட் காலம் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நம் சுற்றுச் சூழலின் அவல நிலை எப்படி என்பது வெட்ட வெளிச்சம். இப்போதிருக்கும் சூழல் மனிதன் வாழ தகுதியற்றது ஆனால் கிருமிகள் வாழும் சுழலுக்குள் நாம் நம் பூமியை பராமரித்து வருகிறோம் என்பது வெட்கக்கேடானது. சத்திய வேதாகமம், “நான் பூமியை உண்டு பண்ணி, நானே அதின் மேல் இருக்கிற மனுஷனை சிருஷ்டித்தேன். என் கரங்கள் வானங்களை விரித்தன, அவைகளில் சர்வசேனையும் நான் கட்டளையிட்டேன்”. ஏசாயா : 45 : 12
“வானங்களைச் சிருஷ்டித்து, பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதை குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது, நானே கர்த்தர் வேறொருவர் இல்லை”. ஏசாயா : 45 : 18
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அதை பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதியாகமம் : 2 : 15

இந்த மூன்று வசனங்களும் நமக்கு சில வெளிச்சத்தை அல்லது உண்மையை வெளிப்படுத்துகிறதை காண முடியும். 1. வானத்தையும் பூமியையும் மனுஷனையும் கர்த்தர் படைத்தார் 2. பூமி மனுஷனின் குடியிருப்பாக கொடுக்கப்பட்டது 3. மனுஷன் பூமியை தனக்காக பயன்படுத்திக்கொள்ளவும் அதே நேரத்தில் பாதுகாக்கவும் எனும் மூன்று முக்கியமான உண்மை விளங்குகிறது. மனிதனோ தன் சுய நலத்திற்க்காக பயன் படுத்திக்கொண்டானே ஒழிய அதை பாதுகாக்க தவறி விட்டான் என்ற பேருண்மையை கரோனா வைரஸ் நமக்கு இப்போது உணர்த்திக்கொண்டிருக்கிறது. மனிதன் வாழ்வதற்கு இசைவாக வடிவமைக்கப்பட்ட பூமி இன்று கிருமிகளின் சொர்க்க புரியாக காரணம் மனிதனின் சுயநலம்.

உணவில் கலப்படம் :

மனிதனின் சுயநலத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. வாழும் மண்ணை கொடுத்தவன் உண்ணும் உணவையும் கெடுத்து விட்டான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது முது மொழி. ஆசை யாரை விட்டது. ஒரே நாளில் பணக்காரர்களாக வேண்டும் என்ற அதீத ஆசையே விபரீதத்திற்கு காரணம். உற்பத்தியை பெருக்க, குறைந்த நாளில் மகசூலை பெருக்க, அளவை அதிகரிக்க, வீரியத்தை பெருக்க என்று வினோதமான யுக்தியில் உணவு பொருட்கள் அனைத்தும் மனிதனுக்கு விஷத்தை ஏற்றுகிறது. உணவே மருந்தாக இருந்த காலம் போய், மருந்தே உணவாக வாழும் மனிதன் இன்று. விவசாயத்திற்கு அத்தியாவசியமான மழை போயித்து போனது ஒரு காரணம் என்றாலும் போயித்து போன மழைக்கு எது காரணம் என்று தேடியிருக்க வேண்டும். ஆனால் மனிதனோ குறுவை சாகுபடிகளை கண்டு பிடிக்க தன் அறிவை பயன் படுத்தினான். தேவனோ, “நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழையை பெய்யப் பண்ணுவேன். பூமி தன் பலனை தரும், வெளியில் உள்ள விருட்சங்கள் எல்லாம் தன் கனியை தரும். லேவியராகமம் : 26 : 4

ஏற்ற காலத்தில் நான் மழையை தருவேன் என்று சொல்லியிருக்கும் போது பருவத்தே ஏன் மழை பொழிவு நடைபெற வில்லை என்றோ பருவம் தவறிய மழை ஏன் என்றோ மனிதன் ஆராயத் தவறிவிட்டான். மாறாக தன் மனம் போல் வாழ்விலும், குறுக்கு வழியிலும் தன் வாழ்வை விருத்தியடைய செய்வதில் தன் மனதை செலுத்த முற்பட்டுவிட்டான். விளைவு அவன் பாதை முள்ளும் குறுக்குமே. சபிக்கப்பட்ட பூமியை பயன்படுத்திக்கொள்ள முனைப்புகாட்டியவனுக்கு நூதன வழி முறைகள் வாழும் ஆதாரமாய் அமைந்து விட்டது. இவைகளால் மனிதனுக்கு கிட்டிய பலன் புசிப்புக்கு நலமான உணவு பதார்த்தம் அல்ல வெளியின் பயிரான கலப்படமும், சத்துக்கள் குன்றியதும், மரபு மாற்றத்திற்உட்பட்டதுமான பதார்த்தங்களே அவனுக்கு உணவானது. விளைவு மண்ணான மனிதன் மண்ணுக்கே திரும்பத்தக்கதாக அவனே அவன் உடலை ஆயத்தப்படுத்திக்கொண்டான்.

நோய் எதிர்ப்பு சக்தி இன்மை :

மேலே சொல்லப்பட்ட இரண்டு காரியங்களினால் மனிதனின் உடம்பில் நோய் எதிர்ப்பு தன்மை முற்றிலுமாய் குறைந்து போனதற்கான காரணிகளில் ஒன்று. மற்றொன்று மனிதனின் வாழ்க்கை முறை. மூன்றாவது அதிகரிக்கப்பட்ட வீரியத்துடன் கூடிய மருத்துவ முறைகள். இந்த மூன்று காரணிகளும் மனித உடலுக்கான தன்மையிலிருந்து மனிதனை வேறு படுத்தி செயற்கை தன்மைகளுடன் கூடிய இயந்திர தனம் காணப்படும் அளவிற்கு மனிதன் மாறிவிட்டான். மனிதன் என்பவன் beautifully and carefully made எனும் வாக்கியத்திற்கும், அர்த்தத்திற்கும் பாத்திரமாக உருவாக்கப்பட்டவன். ஆனால் கீழ்படியாமையால் துவங்கிய மனித வாழ்க்கைப் பயணம் தொடர் துயரப் பயணம் என்கிற ரீதியிலேயே தொடர்வது துயரத்தின் உச்சம்.

நமது உடல்கூறு தூய்மைக்கு இலக்கணமாகும். நமது உடல் எந்த ஒரு foreign bodyயையும் ஏற்றுக்கொள்ளாது, அனுமதிக்காது. ஆனால் இன்று நிலைமை வேறு. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிற காரணங்களினால் பல்வேறு உலோகங்களினால் ஆனா பொருட்கள், எந்திரங்கள் மற்றும் மின்சாதன கருவிகள் பொருத்தப்படும் அளவுக்கு உடல் பக்குவப் பட்டுள்ளது. மனித உடலின் ஒவ்வாமை என்பது இன்று ஏட்டளவில் நின்று போன கதை. ஆகவே தான் தடுப்புசிகள் / மருந்துகள் யாவும் நோய் தடுப்பாக அல்ல நோய் தாங்குபவையாக வருகிறது. நாம் அனைவரும் அறிந்தும் அறியாமலும் இயந்திரமயமாகி வருகிறோம். இதன் முடிவு அழிவு.

வேதாகமம் தரும் தீர்வு :

நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுகிளிகளுக்கு கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்துக்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தை தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பேன். 2 நாளாகமம்: 7 : 13 – 14 . நாம் இவ்வார்த்தைக்கு இணங்குவோமானால் நாம் அனைவரும் பிழைப்பது உறுதி. நாம் செய்ய வேண்டுவது இது தான் 1. நாம் நம் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி 2. நம் தேவன் முகத்தைத் தேடி, ஜெபித்து 3. நாம் நம்மை தாழ்த்தினால் நமக்கு பதில் இப்படியாக வரும். 1. நம் வேண்டுதலை பரலோகத்தில் இருக்கும் தேவன் கேட்ப்பார் 2. நாம் உணர்த்து தாழ்த்தினதை பார்த்து, மன்னிப்பார் 3. அப்பொழுது நம் தேசத்திற்கு சுகம் கிடைக்கும். நாம் மகிழ்ச்சி அடைவது நிச்சயம், ஆமென்.

சுவி. பாபு T தாமஸ் , இராணிப்பேட்டை.
ourshepherdsvoice.wixsite.com/mysite
ourshepherdsvoice@gmail.com

Bible Study வேத ஆராய்ச்சி counseling health

stress கூட்டுக் குடும்பம் சிதைந்து இன்றைய சிறிய குடும்ப அமைப்பினால், மன அழுத்தம் அதிகமாகியுள்ளது. மேலும், கணவன், மனைவி வேலைக்குச் செல்வதும் மனஅழுத்தத்திற்கு மற்றொரு காரணமும் ஆகும். இன்றைய வாழ்க்கை முறையும் குடும்பத்தில் மனஅழுத்தத்தை அதிகரித்துள்ளது. உலகமயமாக்குதலினாலும், புதிய பொருளாதாரக் கொள்கையினாலும், பரபரப்பான வாழ்க்கை முறையாகிவிட்டது இன்றைய வாழ்க்கை. இதனால், வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் பேசிக் கொள்ள முடியாத நிலையில் பிஸியாக எல்லோரும் உள்ளனர். வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பிஸியாக உள்ளனர். காரணம், இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள வீட்டிலுள்ள அனைவரும் பிஸியாக உள்ளனர். இதனால் மனஅழுத்தம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.

வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் கவலை

பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்ற கவலை வீட்டின் ஆண்களுக்கு; குறைவான பொருளாதாரத்தில் சமாளிக்க வேண்டும் என்ற கவலை வீட்டின் பெண்களுக்கு; படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக படி படி என்ற அழுத்தம் சிறுவர் சிறுமியர் முதல் வாலிபர்களுக்கு; படித்த வாலிபர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற கவலை; தங்களை கவனிப்பதில்லை என்ற கவலை பெரியவர்களுக்கு. இந்த கவலைகளினால் இன்றைய குடும்பங்களில் அனைவருக்குள்ளும் மனஅழுத்தம் காணப்படுகின்றன.

மனஅழுத்தம் அதிகரிப்பதனால் ஏற்படும் விளைவுகள்

மனஅழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு விடியல் தேட தொலைக்காட்சி முன் அமர்ந்தால் எப்போதாவது நல்ல நிகழ்ச்சிகள் காட்டப்படுவதுண்டு. ஆனால், பெரும்பாலும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் வன்முறையைத் தூண்டும் காட்சிகளைக் காட்டி நம் மனஅழுத்தத்தை மேலும் அதிகரித்து விடுகிறது. அக்காட்சிகளில் காட்டப்படும் சண்டைகள், கோபங்கள் மறைமுகமாக நம் மனதில் பதிந்து நம் குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் ஏற்பட வழி வகுக்கிறது. விடியல் இங்கு அஸ்தமனமாகிவிடுகிறது. தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சீரியல்களில் பெரும்பாலும், குடும்பத்தில் சண்டைகள், தகாத உறவுகள், மூர்க்க தனமான எண்ணங்களையுடைய சூழ்ச்சி சதிகள், நாணயமற்றதன்மை, பொய்யான பணக்காரத்தனம் என்று பல பலக் காட்டப்படுகிறது. இதுதான் உண்மையென்று எண்ணும் அளவிற்கு ஜோடித்துக் காட்டப்படுகின்றன. இதனால், நம் வீட்டிலும் பல போலித்தனத்திற்கு அடிகோலுகிறது. மனஅழுத்தமும் அதிகரிக்கின்றது.

பணமும் மூலக்காரம்

பணம் பணம் என்று இந்த உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. நாமும் எவ்வகையிலாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் உள்ள வருவாயிட்டுவோர் மனதில் இருப்பதினால், இன்றைய வியாபாரத்திலும், சம்பாதிப்பதிலும் உண்மையிருப்பதில்லை. கலப்படம், அளவு குறைத்தல், லஞ்சம், சீக்கிரத்தில் சம்பாதிக்கும் முறைகள் என்று வேறு வழிகளில் செல்ல வேண்டிய நிர்பந்தம். இதனால் மனஅழுத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இதை வாசிக்கும் நண்பர்களே! இதே சூழ்நிலையில் நீங்களும் இருக்கின்றீர்களா? மனஅழுத்தினால் சோர்ந்து போயிருக்கிறீர்களா? மனஅழுத்தத்தினால் விரக்தி ஏற்பட்டு கவலை, கோபம் என்று எரிச்சலுடன் வாழ்க்கை நடத்தும் பலர், என்ன வாழ்க்கை இது! பேசாமல் செத்துச் தொலைக்கலாம் என்று நினைப்பதுண்டு. மனஅழுத்த மிகுதியினால் பலர் தற்கொலை செய்து கொள்வதுண்டு. சமீபகாலமாக வியாபார நஷ்டத்தினால், அநேக கடனிமித்தம் பலர் தற்கொலை செய்ததை நாம் தினசரி நாளிதழ்களில் படித்ததுண்டு. மனஅழுத்தம் குடும்பத்தில் பிரிவினை உண்டாக்கும். நல்லுறவினைப் பாதிக்கும்.

இதோ வழி

ஆதலால், மனஅழுத்தத்தினின்று நாம் கண்டிப்பாக விடுபடவேண்டும். அதற்கு நல்ல வழியுண்டு.

வேதம் காட்டும் வழியில் நாம் நடந்தால், அதிலிருந்து நாம் விடுபட முடியும். இயேசு இந்த உலகத்திலிருந்து பரத்திற்கு போகும் முன்பு நமக்கு சமாதானத்தை வைத்து போவதாக (யோவான் 14:27) கூறினார். அப்படியானால் நாம் அந்த சமாதானத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. ஒரு வேளை நாம் மனஅழுத்தத்தில் இருந்தால் நாம் மனஅழுத்தத்தை தெரிந்தெடுத்தோம் என்று அர்த்தம். இயேசு வைத்துப் போன சமாதானத்தை நாம் தேர்தெடுக்க வில்லை என்று அர்த்தம். “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள் (ஏரேமியா 2 : 13). இந்த சூழ்நிலை நம்முடைய இன்றைய நிலைமையை சரியாக காட்டுகிறது அல்லவா! நாம் கர்த்தரைத் தெரிந்து கொள்ளாமல் வெடிப்புள்ள உலகப்பிரகாரமான வெடிப்பு தொட்டிகளை நாடி ஓடி மனஅழுத்தத்தினால் நிறைந்திருக்கிறோம்.

இன்று கர்த்தர் நம்மை ஜீவத்தண்ணீராம் அவரண்டை அழைக்கிறார். நாம் அவரிடத்தில் வந்தால் அவர் நம்முடைய பாரங்களை சுமப்பார். வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! என்னிடத்தில் வாருங்கள் என்று நம்மை இயேசு அழைக்கிறார். மேலும், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றும் வாக்களித்திருக்கிறார் (மத்தேயு 11 : 28). நாம் அவரை தேர்ந்தெடுப்போமா? அவர் வைத்துப் போன சமாதானத்தை நாம் எடுத்துக் கொள்வோமா?

மனஅழுத்தத்திலிருந்து விடுபட பரிசுத்த வேதாகமம் காட்டும் வழிகள்
  1. முதலாவது நாம் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியை நாம் தேட வேண்டும். அப்பொழுது நம்முடைய தேவைகளை தேவன் சந்திப்பார்.
  2. நம் கண் முன் நிறுத்தியிருக்க வேண்டியவைகள் தேவனுடைய வசனத்தையே. உலகப்பிரகாரமான மாயையான டிவி பணம் போன்றவற்கு முக்கியத்துவம் தரவேண்டாம்.
  3. பண ஆசையை கொண்டு சம்பாதிக்காமல் கர்த்தர் வழியில் பணமும் உலகத்திலுள்ள அனைத்தும் கர்த்தருடையதென்று உணர்ந்து போதுமென்கிற மனதுடன் நாம் சம்பாதித்தால் தேவன் நம் வருவாயை ஆசீர்வதிப்பார். காரணம், பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது. ஆனால் பணம் நம் வாழ்க்கைக்கு தேவை. அது நமக்கு தேவையை சந்திக்க போதுமென்கிறவகையில் (மனதுடன்) சம்பாதிக்க வேண்டும்.
  4. நம் கவலைகளெல்லாம் கர்த்தரிடத்தில் ஒப்படைத்து நாம் கர்த்தருக்குள் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் இராஜ்யத்தைக் கட்டும் சிற்பிகளில் ஒருவன்,

(இரா. யோவான் காந்தி)

நங்கூரம் தலைமைத்துவ ஊழியங்கள்
Mobile : 98408 72799

Yovan

R. Yovan Gandhi, Evangelist, lives in Chennai, India

health

நலம் பெற நல்ல செய்திகள்

நமது சரீரம் கடவுள் தங்கும் ஆலயம். உயிர் உள்ள வரை நல்ல சுகத்துடனும், பெலத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதே நம்மைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ஆனால் நம்மில் பலா் நமது ஆரோக்கியத்தைக் குறித்த அக்கறை இல்லாமல், கண்டதையும் சாப்பிடுகிறோம், நம் சரீரத்தை பேணிப் பராமரிக்கவும் தவறுகிறோம்.

இந்த இதழில் நமது சரீரத்தின் ஒரு முக்கிய உறுப்பான பல்லைக் குறித்தும், அதை பராமரிக்கும் முறைகளைக் குறித்தும் பார்ப்போமா? வாருங்கள் …

பற்கள்

பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை பாதுகாக்க முடியும் என்கினர் பல் மருத்துவர்கள்.
சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள அசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், முகத்தில் அழகையும் பாதுகாக்க முடியும்.

பாதுகாப்பு முறை: சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும். மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தேர்வு செய்வதும் அவசியம். பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும். கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலி மையை பாதுகாக்க முடியும்.

உணவு முறை: பொதுவாக 30 வயதுக்கு மேல் பல காரணங்களால் பல் பாதிப்பு அதிகரிக்கிறது. மேலும் சிறு வயது முதல் கால்சியம், அயோடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக் குறைபாட்டினால் பற்கள் விரைவில் வலுவிழக்கின்றன. இவற்றை தடுக்க பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின்சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி , எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இவ ற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, மீன், கீரை வகைகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், அடிக்கடி சேர்க்கவும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இனிப்பு, உப்பு, காரம் குறைத்து கொள்ளவும். சூடாகவும், காரமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிட நேர்ந்தால் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். இனிப்பு சாப்பிட்ட பின் கண்டிப்பாக பிரஷ் செய்யவும். வயதாகும் போது எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாகவே பல் தேய்மானம் மற்றும் பல் இழப்புகள் ஏற்படும். பல்லை சுத்தமாகப் பராமரித்தல், சத்தான உணவு ஆகியவையே பல் ஆரோக்யத்தை பாதுகாக்க உதவும் என்கின்றனர் உணவு ஆலோசகர்கள்.

பிரயோஜனமான நல்ல தகவல்களை உங்களுக்கு அளித்திருக்கிறோம். இவற்றை வாழ்க்கையில் கடைபிடித்து கடவுளுக்கு மகிமையாக நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வாழ்த்துகிறோம்!

ஜெ. சாம்ராஜ் ஹாப்பர்
போதனை மற்றும் பயிற்சி ஊழியங்கள்
Teaching & Training Mission
Mobile : 98410 40205

samraj

Samraj Hopper