இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தை என்னவென்று கேட்டால், சிறுபிள்ளை கூட எளிதாக சொல்லிவிடும் ‘எழுப்புதல்’ என்று! இது உண்மைதானா என்று அலசுகிறார் சாஹா
இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தை என்னவென்று கேட்டால், சிறுபிள்ளை கூட எளிதாக சொல்லிவிடும் ‘எழுப்புதல்’ என்று! உண்மைதானே!
ஆனால் ‘எழுப்புதல் என்றால் என்ன அர்த்தம்’ என்று கேட்டால், விசுவாசிகளும் ஊழியர்களும் பல்வேறு விதமான பதில்களை கூறுவதை நாம் காணமுடிகிறது.
எழுப்பதலற்ற மந்தநிலை
அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியா; 4:19ல் “என் சிறுபிள்ளைகளே…” என்று எழுதுகிறார். மிகவும் கருகலான சத்தியங்களை கலாத்தியா தேசத்தின் விசுவாசிகளுக்கு விவரித்து எழுதுகின்ற நேரத்தில் ‘என் சிறுபிள்ளைகளே’ என்கின்ற பதத்தினை பவுல் உபயோகிக்கிறார். விசுவாசத்தில் வளர்ந்திருக்க வேண்டியவர்கள் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கிறார்கள் என்பதை பவுல் மறைமுகமாக சொல்கிறார்.
கலாத்தியர் 4:20ம் வசனத்தில் “உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், … வேறுவகையாகப் பேச விரும்புகிறேன்” என்று பவுல் எழுதுகிறார். மேலும் தம் கடிதத்தை ஆரம்பிக்கும் தருணத்தில் தானே பவுல் “உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சாரியப்படுகிறேன்…” என்று கலாத்தியா; 1:6-7 வசனங்களில் பவுல் திட்டமும் தெளிவுமாக கூறுகிறார்.
எழுப்பதலற்ற இன்றைய நிலை
2 தீமோத்தேயு 3ம் அதிகாரம் 1-5 வசனங்களில் பவுல் எச்சரிப்பாக சில காரியங்களை எழுதியிருக்கிறார். “மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” என்ற வாரத்ததைகளை அருள்கூர்ந்து கவனியுங்கள்!
பிரியமானவர்களே,
ஐந்தே வசனங்களில் உலகின் கடைசி காலம் எப்படியிருக்கும் என்பதை அப்படியே படம் பிடித்துக் காண்பித்து விட்டார் பவுலடியார்.
திருச்சபையின் நிலைமையும் உலகின் போக்குக்கு ஒத்ததாக மாறிவருகிறதோ என்ற அச்சமும் எழுகின்றது. காலத்தைப் பார்த்தால் போதகர்களாய் மாறியிருக்க வேண்டிய திருச்சபையாராகிய நாம் சிறுபிள்ளைகளைப் போலவும், சந்தேகப்படுகிறபடியும், வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறவர்களாகவும், கிறிஸ்துவின் சுவிஷேத்தை புரட்ட மனதா யிருருக்கிறவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கிறோமோ என்கிற சந்தேகமும் எழுகின்றது!
எழுப்பதல் என்ற பெயரில் தவறான நிலை
‘எழுப்புதலில் வாழ்கிறோம்’ என்று கூறுகிற அன்பிற்குரிய சகோதர சகோதரிகளில் அநேகர் மணிக்கணக்காக குதிப்பதையும், ஆடுவதையும், கீழே விழுவதையும், புரளுவதையும், பரவச பேச்சுக்களையும், ஆழ்நிலை உறக்க நிலைகளையும் இன்னும் பல பரவச அனுபவங்களையுமே ‘எழுப்புதல்’ என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சற்று கவலையான காரியம்தான்.
இதில் இன்னும் கவலை அளிக்கின்ற விஷயம் என்னவென்றால் மேலே 2 தீமோ 3:1-5ல் பவுலடியார்; கூறும் 19 விதமான தவறான குணநலன்களில் சிலவற்றையாகிலும் தன்னில் வைத்து வாழ்ந்து கொண்டே ‘எழுப்புதல் எழுப்புதல்’ என்று உரக்க உரைத்துக் கொண்டிருப்பவர்களும் கிறிஸ்தவத்தில் மலிந்து கிடக்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையே!
எழுப்புதலின் உண்மை நிலை
கடைசிக்கால திருச்சபைக்கு மாதூய ஆவியானவர் அன்போடு சொல்லும் செய்தி என்ன? தூய வேதாகமத்தில் எழுதி கொடுக்கப்பட்டுள்ள சத்தியங்களுக்கும், நல்வார்த்தைகளுக்கும், எச்சாரிப்புகளுக்கும், உற்சாகமூட்டுதலுக்கும், கிறிஸ்துவானவாரின் வழிநடத்துதலுக்கும், இன்னும் பல உயரிய கருத்துக்களுக்கும் முழுமையாக கீழ்ப்படிவதே நிஜமான எழுப்புதல். மற்ற எழுப்பதல் அனுபவங்கள் எல்லாம் மழைக்காலத்து இரவில் பூத்து, காலை வெயிலில் கருகிப்போகின்ற காளான் போன்றவைகள் தான்.
கிறிஸ்துவோடு வாழ்வோம், கிறிஸ்துவை உலகுக்கு பிரதிபலித்து காட்டுவோம். அதுவே இன்றைய அதிமுக்கிய தேவை. கிருபை உங்களோடிருப்பதாக!
ஜெ. சாம்ராஜ் ஹாப்பர்
போதனை மற்றும் பயிற்சி ஊழியங்கள்
Teaching & Training Mission
Mobile : 98410 40205