அன்பே பிரதானம்
ஆசையாக பாஷைகள் பல பேசினாலும்
நேசமான பாசமது உள மிலையெனில்
ஓசைமிகு கைத்தாளமே யான் வெறுமதிர்
ஒலியெழு வெண்கலமே என உணர்வேன்
வருஞ்செயல் உரைத்திடு வரமி ருந்தும்
மறைபொருள் அறிந்திடு தரமி குந்தும்
மலைநகர்த்தும் கலையறிந்தும் அன்பு நீங்கின்
சிலையளவே நிலையாகும் நிதம் அறிவேன்
அன்னதானம் ஆயிரம் தான் பண்ணியும்
என்னதான் நன்மையே நான் எண்ணியும்
என்சரீரம் நெருப்பிலிட உளம் நண்ணியும்
நேசம்நீக்கி வாசம்செயின் பயன் விண்ணுமோ?
மாற்று மொழிகளும் விரைந்து குறையுமே
மகிமை வரங்களும் பறந்து மறையுமே
அறிவின் முழுமையும் அழிந்து ஒழியுமே
அன்பின் தன்மையோ நிலைத்து நிற்குமே
எதிர்வரும் செயல்தனில் அதி விசுவாசம்
எதுவரினும் நிலைகுலையா திட நம்பிக்கை
இதயமதில் வழிந்தோடும் தூய அன்பு
இம்மூன்றில் அன்பதுவே நேய பண்பதுவாம்.
– தாரா (உலகிற்கு வார்த்தை)