பெற்றோர் இல்லாத வீட்டில் தங்களின் பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படுகிறவர்களைக் கேட்டுப்பாருங்கள் “பெற்றோர் மிகவும் அருமையானவர்கள்” என்று கட்டாயம் சொல்லுவார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் பெரியவர்கள் இல்லை என்றால் நிலைமை இன்னும் மோசம் தான்.
பெலன் உள்ளவரை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பலவிதங்களில் உதவிகள் செய்கிறார்கள். வீட்டின் பொருட்களை அதனதின் இடத்தில் வைப்பது, அவசர நேரத்தில் பக்கத்து கடைக்கு சென்று பொருள் வாங்கி வருவது, பேரக்குழந்தைகளுக்கு தேவைப்படும் பல்வேறு உதவிகள், சமையலில் சிறு சிறு உதவிகள், ஓய்வுதியம் வாங்கினால் ஒரு பங்கினை கொடுத்து உதவுவது, பிள்ளைகள் இல்லாத நேரத்தில் பொறுப்பாக வீட்டை பார்த்துக் கொள்வது என்று பல்வேறு விதங்களில் கலக்குகிறார்கள். பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். இவைகளை செய்வதற்கு பெரியவர்களுக்கு நேரம் நிறைய உண்டு, ஆனால் பெலன் குன்றும் போது, வயது அதிகரிக்கும் போது பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. அப்போது அதே பெரியவர்கள் பிள்ளைகளுக்கு பாரமாக தோன்றுகிறார்கள்.
பண உதவியோ, வேறு உதவிகளோ செய்ய இயலாத பெற்றோரை இன்றைய சந்ததி எந்த அளவு மதிக்கிறது? கவனிக்கிறது? போற்றுகிறது? என்பதை சற்று அலசிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
தனியாக உட்கார்ந்து ஒரு நாள் யோசித்துப்பாருங்கள். நீங்கள் இவ்வுலகில் நீங்கள் பிறந்த நாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எப்படி இருக்கும்? வாய்ப்பே இல்லை. நீங்கள் அழுதீர்கள். உங்கள் அம்மா தன் இரத்தத்தையே உருமாற்றி உங்களுக்கு உணவாக கொடுத்தார்கள். அப்பா அம்மா இரவெல்லாம் கண்விழித்து உங்களை கவனித்துக் கொண்டார்கள். கடினமாக உழைத்து உங்களை போஷித்தார்கள், நீங்கள் சிரித்த போது அவர்களுகும் சிரித்தார்கள். நீங்கள் அழுதபோது அவர்களும் வேதனைப்பட்டார்கள். உங்களை வளர்த்து ஆளாக்குவதற்கு தங்களால் ஆன எல்லா பிரயத்தனங்களையும் செய்தார்கள். உங்களுக்கு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடி, நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார்கள். அல்லது நீங்கள் விரும்பினவரை சுற்றுமும் நட்பும் எதிர்த்தாலும் உங்களுக்காக மணமுடித்துக் கொடுத்தார்கள். அப்படித்தானே!
ஓல்ட் ஏஜ் ஹோம்! பெற்றெடுத்த பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு அல்லது வேதனை தாங்க முடியாமல் தாங்களாகவே வேறு வழியின்றி வந்து தங்கிடும் இடம் தான் முதியோர் இல்லம். முதியோர் இல்லங்களில் கிறிஸ்தவ பெற்றோர்களை காணும் போது நாம் எங்கோ தவறு செய்கிறோம் என்று தோன்றுகிறது.
கர்த்தருடைய வார்த்தை என்ன சொல்கிறது. சற்று கவனிப்போமா?
உபா-5:16 உன் தேவனாகிய கர்த்தர்; உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும் உன் தேவனாகிய கர்த்தர்; உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
நீதி-20:20 தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காலீஜீருளில் அணைந்துபோம்.
பிரியமானவர்களே, நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு உதவி செய்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்து நாம் அவர்களை மதித்து நடத்துவது தவறானது. ஒருவேளை அவர்கள் சிறிய தவறுகள் செய்தாலும், சற்று அதிகமாக பேசினாலும் பொறுத்துக்கொள்ளலாமே!. பெற்றோரோடு நேரம் செலவிடுங்கள், மனம் விட்டு பேசுங்கள், அவர்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள். திடிரென ஒரு நாள் அவர்கள் நம்மை விட்டு கடந்து போய்விடுவார்கள். அதன்பின் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.