சமூக வலைதளங்களிலிருந்து

 

ஒரு தகப்பனும் , மகனும் பக்கத்து ஊருக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வரும் வழியில் அவர்கள் வந்த வண்டி பழுதாகிவிட்டது. அங்கிருந்து அவர்களுடைய ஊர் ஓரளவிற்கு நடந்து போய்விடும் தூரந்தான்.

இருள் கவ்வத் தொடங்கி விட்டது. வண்டி வேலை முடியக் கொஞ்சம் நேரம் எடுக்கும்.

வழியில் தெருவிளக்குகளும் எரியவில்லை.

எனவே மெக்கானிக் அவர்களிடம் ஒரு டார்ச் லைட்டைக் கொடுத்து அவர்களை ஊருக்குப் போய் விட்டு மறுநாளில் வந்து வண்டியை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்.

அவர்களும் புறப்பட்டனர்.

எப்படி நடந்து போனாலும் அவர்கள் வீடு போய்ச் சேர இரண்டு மணி நேரமாகும். அன்றைக்கென்று பார்த்து இருட்டு அதிகமாக இருந்தது.

மகன், தந்தையிடம் கேட்டான் ,
” அப்பா இந்த இருளைப் பார்த்தா பயமாயில்லைப்பா ?”

அப்பா சொன்னார் ,
“நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்” னு சொல்லு . பயமெல்லாம் போயிடும்.

மீண்டும் மகன் கேட்டான் ,
“ஏம்பா , வழியெல்லாம் இத்தனை கல்லாக் கிடக்கே ? எங்கேயாச்சும் தடுக்கி விழுந்திட்டா ?”

அப்பா சொன்னார் ,
” உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்” ங்கற வசனத்தை நினைச்சுக் கிட்டா அந்த பயமும் வராது” .

மீண்டும் மகன் கேட்டான் ,
” இதெல்லாம் சரி . வழியில் ஏதாச்சும் ஆபத்தான மிருகமோ, விஷ ஜந்துக்களோ வந்தா ?”.

அப்பா புன்னகையுடன் அதற்கும் பதில் சொன்னார் ,

“சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய் ” என்றும் வசனம் இருக்குதே” அதை நம்பினா போதுமே “.

எந்தக் கேள்வி கேட்டாலும் அப்பா , வசனத்திலிருந்தே பதில் சொல்வார் என்பது மகனுக்கு நன்றாகவே தெரியும் . இருந்தாலும் அப்பாவின் விசுவாசத்தைப் பார்ப்பதில் மகனுக்கு ஒரு சந்தோஷம்.

இப்போது மகன் கடைசியாக ஒரு கேள்வி கேட்டான்.

” சரிப்பா, இன்னும் கொஞ்ச நேரத்தில நாம வீட்டை நெருங்கிடுவோம், இந்த சின்னப் பயணத்துக்கு வசனம் ஆறுதல் கொடுக்குது.

ஆனா வாழ்க்கைப் பயணம் பெருசாச்சே ? அது முழுசையும் இந்தச் சின்னச் சின்ன வசனங்களைக் கொண்டே கடந்து போயிட முடியுமா?”

அப்பா ஒன்றும் சொல்லாமல் டார்ச்சை அவன் கையில் கொடுத்தார் .

“இந்த டார்ச் வெளிச்சத்தை நம் வீடு வரைக்கும் தெரியிற மாதிரி காட்டேன். நாம ஈசியா நடந்து போயிடலாம்” என்றார். மகன் சிரித்தான்.

“அப்பா , இது டார்ச்சுப்பா. இதால அதிக பட்சமா பத்தடி தூரத்துக்குத்தான் வெளிச்சம் காட்ட முடியும் ” என்றான்.

அப்பா உடனே சொன்னார் ,
” வெறும் பத்தடி தூரத்துக்கு மட்டும் வெளிச்சம் காட்டுற டார்ச்சை வச்சுகிட்டு ரெண்டு கிலோ மீட்டர் தாண்டி வந்துட்டோம். இன்னும் போகப் போறோம்.

இது நம்ம வீடு வரைக்கும் தெரியிற அளவுக்கு வெளிச்சம் தரலைன்னாலும் , அடுத்தடுத்து கொஞ்சம் கொஞ்சமா வழிகாட்டி நம்ம வீடு வரைக்கும் கொண்டு போய்விட்டிடும் .

இதைவிட ஜீவனுள்ள வசனம் மேலானது இல்லையா? .

ஒவ்வொரு கட்டத்துக்கும் ஆவியானவர் கொடுக்கும் ஒவ்வொரு வசனத்தைப் பிடிச்சுக்கிட்டே நடந்து பார். வாழ்க்கைப் பயணத்தை ஈசியாக் கடந்துடலாம்” .

“உண்மைதாம்ப்பா. உங்களை மாதிரியே நானும் இனி அதிகமா வேதத்தைப் படிச்சு வாழ்க்கையோட எல்லாக் கட்டத்தையும் எளிதா கடந்து போவேன்” என்று சொல்லி மகன் அப்பாவின் கரத்தை முத்தமிட்டான்.

* வசனமே நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டியாய் வருவது.

அதுவே நம் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119 :105.

counseling Vertical Thoughts - மேலான எண்ணங்கள் சமூக வலைதளங்களிலிருந்து

ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு…
உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு…
உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு… இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்தால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது. பாம்புக்கு கோபம் தலைக்கேறி….
அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது…
தன் பலம் முழுவதையும் சேர்த்து…..

என்ன ஆச்சு…
முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது…
என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு….

இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்திட்டு அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது நாம பண்ணின தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல், மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு அதன் எதிர்விளைவால் நமது மன நிம்மதியை இழந்து….
தேவையற்ற கோபம், பதட்டம், மன அழுத்தம் இவற்றால் நமது உள்ளம் மற்றும் உடல் நலத்தையும் கெடுத்துக்கொண்டு….. நம்மையே இழந்து விடுகிறோம்….

நா_காக்க….

படித்ததில்_பிடித்தது….

– Author unknown

Received in whatsapp social media.

Vertical Thoughts - மேலான எண்ணங்கள் சமூக வலைதளங்களிலிருந்து

கண்டிப்பாக படியுங்கள் அனைவரும்

அன்பின் பிணைப்பின் கயிறு

அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.

தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார்.

அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார்.

ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக போங்கள் என்றார்

இல்லப்பா… நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார்.

அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக்கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப்பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன்.

சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச்சென்றார் அந்தப்பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத்துடைக்க, முதலில் ஒரு துண்டைக்கொடுத்தார். “சாப்பிட என்ன வேண்டும் எனக்கேட்டு, சுறுசுறுப்பாக பரிமாறினார். அந்த பணிப்பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு, முகத்தில் எவ்விதச்சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப்பெண். சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார்.

அந்தப் பணிப்பெண், கட்டணத்தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார்.

“அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!” ன்னு நினைத்துக்கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக்கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒருதுண்டுச்சீட்டில், ‘மை டியர்! இந்தப்பணம் உனக்குத்தான். இந்தச்சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்” என்று எழுதி வைத்திருந்தார்கள்..

அடுத்த மாதம் பிரசவச்செலவுக்கு என்ன செய்யவதென்று அந்த பணிப்பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப்பணம் அவர்களுக்குப்பெரிய உதவி! இரவு வீட்டுக்குப்போனதும், அந்தப்பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்!”னு சொன்னாராம்.

ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன். இந்த உண்மை நிகழ்வை கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள்.

தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.

இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும் அன்பினால்தான்

எனவே, அன்பர்களே, தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம்.

இச்செய்தியை பகிரவது கூடஒரு உதவிதான்.

Ref.: https://www.purposefairy.com/7597/be-kind-what-goes-around-comes-back-around/

Vertical Thoughts - மேலான எண்ணங்கள் சமூக வலைதளங்களிலிருந்து

காய்கறிகள் விற்கும் கடை ஒன்று இருந்தது. அதில் ஜோசப் என்ற மனிதர் இருபது ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருந்தார்.

அந்தக் கடையின் முதலாளி அவரது உழைப்பையும் , நேர்மையையும் வெகுவாக நேசித்தார். அங்கு பணிபுரிந்தவர்களிலேயே அவர் மட்டுந்தான் கிறிஸ்தவர். அவரது உணர்வுகளை முதலாளி மதித்தார். கடை திறக்கும்போதும் , மூடும்போதும் , வேறு   சில பண்டிகை நாட்களிலும் செய்யப்படும் எந்த சடங்குகளிலும் அவர் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அன்று மட்டும் யாருக்கும் விடுமுறை அளிப்பதில்லை. ஆனால் அவருக்கு மட்டும் ஆலயம் செல்வதற்காக , ஒவ்வொரு வாரமும் விடுமுறை அளிக்கப் பட்டது . கர்த்தர், தன்னுடைய வேலை ஸ்தலத்தில் தனக்குக் கிடைக்கும்படி செய்திருந்த சலுகைகளை எண்ணி அவர் அடிக்கடி கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.

முதலாளி ஒரு நாள் இறந்து போனார் . அவருடைய இடத்தில் அவருடைய மகன் இருந்து கடையை நிர்வகிக்கத் தொடங்கினான். வந்த முதல் நாளிலேயே ஜோசப் , அவன் கண்களுக்கு நெருடலாகத் தெரிந்தார் .

கடையில் நடக்கும்  சடங்குகளுக்கு அவர் விலகியிருப்பதும் , நல்ல வியாபாரம் நடக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவருக்கு மட்டும் விடுமுறை கொடுக்கப்படுவதும் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. அத்துடன் அவருடைய பல வருட அனுபவத்தின் நிமித்தமாக அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த சம்பளத்தில் இரண்டு இளைஞர்களை நியமித்தால் அது கடையின் வளர்ச்சிக்கு உதவும் என்று நினைத்தான்.

ஒரு நாள் அவரைத் தனியே அழைத்து , ” ஜோசப் நீங்க இருபது வருஷமா இங்கே இருந்துட்டீங்க. சில வருஷமா உங்க வேலை எங்களுக்கு திருப்திகரமானதா இல்லை. கடைக்காக நாங்க பூஜை நடத்தும்போது கலந்துக்குறதில்லை, நல்ல கூட்டம் வர்ர நாள்ல லீவு எடுத்துக்குறீங்க. இதெல்லாம் கடையோட வளர்ச்சியில நீங்க அக்கறை காட்டாததைத்தான் குறிக்குது. உங்களப் பாத்து நாளைக்கு மற்ற வேலையாட்களும் இதே மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிட்டா கடை என்னத்துக்கு ஆகும் ? உங்களுக்கு ரெண்டு முடிவு நான் தரேன். நீங்களா வேலையை விட்டுப் போனா கூடுதலா ஒருமாச சம்பளமும் , கொஞ்சம் பணமும் தர்ரேன் , நானா அனுப்பிட்டா உங்களுக்கு தேவையில்லாத கெட்ட பேர்தான் வரும். உங்க ஆளுங்கதான் நிறைய பேரு இந்தத் தொழில்ல இருக்காங்களே. அவங்ககிட்ட சேந்துட்டீங்கன்னா உங்களுக்கும் நல்லது , அவங்களுக்கும் பிரச்சனையில்லை ” .

உண்ணுகிற சோற்றில் மண்ணை அள்ளிப் போடுகிற காரியத்தை செய்துவிட்டு , ஏதோ சாதனை நிகழ்த்திவிட்டது போல அவர் முகத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். வானம் இடிந்து தலைமேல் விழுந்தது போலிருந்தது ஜோசப்புக்கு.

திருமணத்திற்குக் காத்திருக்கும் மகள் , கல்லூரிப் படிப்பில் கால் வைத்திருக்கும் மகன்கள். ஏற்கனவே இருக்கிற தேவைகளையே சந்திக்க முடியாமல் திணறும் வருமானம். இப்போது அதுவும் இல்லையென்றால் ? மனதிற்குள் கடைக்காக உழைத்த உழைப்பு நிழலாடியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதை விடப் பெரிய கடையிலிருந்து இன்னும் கூடுதலான சம்பளத்திற்கு அழைப்பு வந்ததும் ,

” இது கர்த்தர் எனக்காகக் கொடுத்த இடம் .இதை விட்டு நான்

போகமாட்டேன் ” என்று மறுத்துவிட்டதும் நினைவுக்கு வந்தது .

முதலாளி மகன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் ஜோசப்பிடம் பதில் இருந்தது . இருந்தாலும் எதுவுமே பேசவில்லை. அவன் கொடுத்த கவரை அணிச்சையாய் வாங்கி சட்டைக்குள் வைத்துக் கொண்டார். எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறினார் .

” கர்த்தாவே , ஏன் இதை அனுமதிச்சிங்க ? இனி எப்படிக் குடும்பத்தை நடத்துவேன் ? அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் கேலியா பாப்பாங்களே . பெண்டாட்டி , பிள்ளைகளுக்கு இதை எப்படி சொல்லப் போறேன் ? இப்படி  திடுதிப்னு துரத்தி விடுற அளவுக்கு அவ்ளோ பெரிய குற்றவாளியா நான் ? ” மனது புலம்பிக் கொண்டிருக்க வீட்டை நெருங்கி விட்டார்.

” ஏசுவே , இந்த விஷயத்தை வீட்டுல சொன்னா என்ன நடக்கப் போகுதுன்னு எனக்குத் தெரியலை. நீங்கதான் அவங்க மனசை திடப்படுத்தணும். கையில இருக்கிற பணம் முடியறதுக்குள்ள அடுத்த வழியைக் காட்டுங்கப்பா ” .  சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

லேசான தலை சுற்றலும் படபடப்பும் சிறியதொரு தடுமாற்றத்தைக் கொடுத்தன.

” என்னங்க , அதுக்குள்ள திரும்பிட்டிங்க ? ” என்ற ஷீலாவிடம் ,

” ஒடம்பு என்னமோ போல இருந்தது , அதான் “. அவர் பதிலில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஷீலா தொடர்ந்தாள்.

” ரெண்டு மூனு நாளாவே கர்த்தர் ஒரு வசனத்தைக் கொடுத்துக் கிட்டே இருந்தாருங்க .

” நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள் ” .

📖மல்கியா 4 :2 .

எதுக்காக இந்த வசனத்தைக் கர்த்தர் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருக்கார்னு கேட்டு ஜெபம் பண்ணேன். இன்னிக்கு காலைல நீங்க கடைக்குப் போனதும் கர்த்தர் இதுக்கான விடையைக் கொடுத்தார் “.

ஜோசப்புக்கு வியர்த்து விட்டது,

” அதுக்குள்ள உண்மை தெரிஞ்சு போச்சா ? ” . அவரது மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் ஷீலா தொடர்ந்தாள் .

” நம்ம சபைக்கு ராகேல்னு ஒரு அம்மா வருவாங்க தெரியுமா , மேட்டுத் தெரு ? காய்கறிக்கடை ? அவங்க மகனும் , மருமகளும் கூட ஜெர்மெனில இருக்காங்களே? ” . ஜோசப்புக்கு நினைவு வந்தது.

ராகேல் அம்மா. சபையில் அடிக்கடி சாட்சியைப் பகிர்ந்து கொள்ளும் பெண்மணி. பல பாடுகளுக்கு மத்தியில் காய்கறி வியாபாரம் செய்து மகனைப் படிக்க வைத்து , வெளிநாட்டுக்கு அனுப்பியும் வியாபாரத்தை மட்டும் விடாமல் செய்து வரும் உழைப்பாளி.

” அவங்களுக்கு என்னாச்சு ? ” ஜோசப்.

” அவங்களுக்கு ஒன்னும் ஆகல “

ஷீலா தொடர்ந்தாள்.

” மருமகளுக்கு அம்மா கிடையாது . அப்பா மட்டுந்தான் . இப்ப அந்தப் பொண்ணு மாசமா இருக்குதாம். பிரசவத்தை அங்கேயே வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்களாம். அந்தம்மாவுக்கு இப்ப விசா , டிக்கெட்லாம் ரெடியாயிடுச்சாம் . அடுத்த மாசம் கிளம்புறாங்க . குழந்தை கொஞ்சம் வளந்து அவங்க திரும்பி வர எப்படியும் ரெண்டு வருஷம் ஆயிடுமாம் . அதுவரைக்கும் கடையைப் பூட்டி வச்சிருக்க முடியாது . வேற யார்கிட்டயாவது ஒப்படைச்சா திரும்ப கடையை வாங்குறது கஷ்டம் ” .

ஜோசப்புக்கு இப்போது கொஞ்சம் புரிந்ததது.

” அதனாலதான் , கடையை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டுப் போனா நல்லதுன்னு நினைக்கிறாங்க. வாடகை ஒன்னும் தர வேண்டாம் . கரன்ட் பில்லும் , வரியும் மாத்திரம் கட்டிக்கிட்டு இருந்தா போதும். எனக்கென்னமோ கர்த்தர் கொடுத்த வசனத்துக்கும் , இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்குதுன்னு தோனுதுங்க . நீங்களும் ‍எத்தனை நாள்தான் இப்படியே மத்தவங்களுக்கே உழைச்சுக் கொடுப்பீங்க ? உங்க உழைப்பும் , அறிவும் நமக்குப் பயன்படட்டுமே. அந்தம்மா வரதுக்குள்ள நாம கொஞ்சம் சம்பாதிச்சு வேற இடத்துல கடை ஏற்பாடு  பண்ணிக்கலாம். இப்போதைக்கு நீங்க கொஞ்சம் பணம் மட்டும் ரெடி பண்ணிட்டா போதுங்க “.

ஜோசப் கண்மூடி ஜெபித்தார் ,

” ஆண்டவரே , நீங்க எதை செய்தாலும் அது எங்க நன்மைக்காகத்தான் இருக்கும்ங்கறத ஒரு நிமிஷம் மறந்து ஏதேதோ புலம்பிட்டேன். மன்னிச்சிடுங்கப்பா . சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிற தேவன் என்னை வெட்கப்பட்டுப் போக விடமாட்டிங்க. நன்றிப்பா. இனியும் நடத்துங்கப்பா ” .

அவர் ஜெபித்து முடித்துக் கண்களைத் திறக்கும்போது வீட்டுக்குள் அப்துல் வருவதைப் பார்த்தார். அப்துல் பல வருடங்களாக அவர்களது கடைக்குக் காய்கறிகள் சப்ளை செய்து வருபவர் .

” என்னா ஜோசப்பு , என்னமோ கேள்விப்பட்டேன் . நீ ஒன்னும் கவலைப்படாதே. இது ஒனக்கு நல்ல நேரம்னு நெனைச்சுக்க. புதுசா வர்ர பயலுவளுக்கு , ஏற்கனவே இருக்குற ஆட்ககளெல்லாம் முட்டாளு , தாம் மட்டுந்தான் புத்திசாலின்னு தோனும். அவனுக்கு உன் அருமை தெரியலை. நான் சொல்றத கேளு. நீ சின்னதா ஒரு கடய மட்டும் புடி. சரக்கு ஃபுல்லா நான் தரேன். சாய்ங்காலம் வித்துட்டு நீ பணம் குடுத்தா போதும் ” குரலைத் தாழ்த்திக் கேட்டார்.

” வீட்டு செலவுக்கு , புதுசா கடையை புடிக்க ஏதாச்சம் காசு , கீசு வேணாலும் கூச்சப்படாம கேளு “.

ஜோசப் அவர் கையைப் பிடித்துக் கொண்டார்.

” செலவுக்கெல்லாம் காசு இருக்குது பாய் . கடையும் ரெடியாயிடுச்சு. ஒரு வாரத்துக்குள்ள எல்லாமே பண்ணிட்டு சொல்றேன் பாய் . ரொம்ப  நன்றி ” .

அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தார்.

” ஷீலா, கர்த்தர் தம்முடைய வார்த்தையை உறுதிப் படுத்துறார் . டீ எடுத்துட்டு வா ” என்றார் .

சில நேரங்களில் மனிதர்கள் உனக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாய்த் தோன்றலாம். ஆனாலும் கர்த்தர் எதையும் காரணமின்றி அனுமதிப்பதில்லை. உன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்தது என்று உணர்ந்து கொள்.

” அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார் “

📖 – 1 சாமுவேல் 2 :8

ஆமென்

அல்லேலூயா

– Author unknown

Received in whatsapp social media.

Bible Study வேத ஆராய்ச்சி counseling spiritual news, ஆவிக்குரிய தகவல்கள் Vertical Thoughts - மேலான எண்ணங்கள் சமூக வலைதளங்களிலிருந்து

*நீ வளர்க்கும் பிள்ளை காயீனா? ஆபேலா? ஓர் உயர்தரமான மகன் அல்லது மகள் தற்செயலாக உருவாவதில்லை. அப்படிபட்டப் பிள்ளையின் பின்னால் மறைந்திருப்பது ஒரு தாய், தகப்பனின் கரிசனை, அக்கறை, முயற்சி.

ஹூஸ்டன் (Houston) என்ற அமெரிக்கப் பட்டணத்தின் காவல் துறையினர் ‘காயீனை உருவாக்குவது எப்படி?’, ‘ஆபேலை உருவாக்குவது எப்படி?’ என்ற தலைப்புகளில் பின்வரும் துண்டுப் பிரதிகளை வெளியிட்டனர்.*

காயீனை உருவாக்குவது எப்படி?

1. பிள்ளை கேட்பதை எல்லாம் கொடு.
2. கெட்ட வார்த்தைகைப் பேசும்போதுச் சிரித்து மகிழ்.
3. ஆவிக்குரிய பயிற்சி அளிக்காதே. 21 வயதில் அவனே தெரிந்துகொள்ளட்டும்.
4. தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டாதே.
5. அவனுடைய வேலைகளையெல்லாம் நீயே செய்.
6. அவன் எதையும் வாசிக்கவிடு. (கணிப்பொறியில் எதையும் பார்க்கட்டும்!)
7. பிள்ளைகளுக்குமுன் கணவனுடன் சண்டை போடு.
8. பணம் கேட்கும்போதெல்லாம் கொடு.
9. அவனுக்கு எதையும் மறுக்காதே.
10.மற்றவர் குறை கூறும்போது மகனுக்கு இசைந்து பேசு.
11.அவன் சச்சரவில் மாட்டிக்கொள்ளும்போது, அவன்மேல் எனக்கு எந்த அதிகாரமுமில்லை எனக் கையை விரித்துவிடு.
12.கண்ணீரின் வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்.

ஆபேலை உருவாக்குவது எப்படி?

1. கிறிஸ்தவ வாழ்க்கையைக் கற்றுக்கொடு-நீதிமொழிகள் 22:6.
2. தேவையானபோது தண்டனை கொடு-நீதிமொழிகள் 22:15.
3. முன்மாதிரியாக வாழ்ந்துக்காட்டு-2 தீமோத்தேயு 1:5.
4. நாள்தோறும் பைபிள் வாசிக்கக் கற்றுக்கொடு-சங்கீதம் 119:9.
5. ஜெபிக்கக் கற்றுக்கொடு-மத்தேயு 18:20.
6. தன் கைகளால் வேலை செய்யக் கற்றுக்கொடு-புலம்பல் 3:27.
7. ஆவிக்குரியவைகளுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்-1 தீமோத்தேயு 4:8.
8. பெரியோர்களை மதிக்கக் கற்றுக்கொடு- 1 பேதுரு 5:5.
9. தாய்மையின் மேன்மையை உணர்த்து-1 தீமோத்தேயு 5:25.
10.சபை வழிபாட்டுக்கும், ஆவிக்குரிய கூட்டங்களுக்கும் ஒழுங்காகச் செல்வதில் முன்மாதிரியாக இரு-எபிரெயர் 10:25.
11.நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொடு-ரோமர் 13:1.
12.நன்னடத்தை நற்பயனைத் தரும் என்பதை விளக்கிச் சொல்-ரோமர் 12:17.

நீ வளர்க்கும் பிள்ளை காயீனா? ஆபேலா? ஓர் உயர்தரமான மகன் அல்லது மகள் தற்செயலாக உருவாவதில்லை. அப்படிபட்டப் பிள்ளையின் பின்னால் மறைந்திருப்பது ஒரு தாய், தகப்பனின் கரிசனை, அக்கறை, முயற்சி, ஜெபம். ஆமென்.

– Author unknown

Received in whatsapp social media.